மாமல்லபுரம் புராதன சின்னங்களில், மூங்கில் குப்பை கூடைகள் தொல்லியல் துறை நடவடிக்கை


மாமல்லபுரம் புராதன சின்னங்களில், மூங்கில் குப்பை கூடைகள் தொல்லியல் துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2019 4:00 AM IST (Updated: 17 Dec 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் விதமாக சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் குப்பை கூடைகளை அகற்றி மூங்கில் குப்பை கூடைகள் அமைத்து தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வந்து சென்ற பிறகு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதற்கு தொல்லியல் துறை விதித்துள்ள தடை அமலில் உள்ளது. ஆனால் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை தொடர்ந்து கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரும்போது, சிலர் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இதன் ஒரு பகுதியாக தற்போது சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் முதற்கட்டமாக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பை கூடைகளுக்கு தடைவிதித்துள்ளது.

அதாவது புராதன சின்னங்களில் பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளுக்கு மாற்றாக மூங்கில் குப்பை கூடைகளை அமைத்துள்ளது. பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் இந்த மூங்கில்குப்பை கூடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக முக்கிய புராதன சின்னங்களில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பை கூடைகள், குப்பை தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன.

இந்த மூங்கில் குப்பை தொட்டிகளை தொடர்ந்து பயன்படுத்த வலியுறுத்தி சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரத்தில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது.

Next Story