சமயபுரத்தில் விசாரணை கைதி சாவு: போலீசார் தாக்கியதில் இறந்ததாக மகன் பரபரப்பு புகார்
சமயபுரத்தில் விசாரணை கைதி இறந்த சம்பவத்தில் போலீசார் தாக்கியதில் இறந்ததாக அவரது மகன் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் சமயபுரம் போலீசார் நேற்று முன்தினம் பழைய பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்த முருகன் (வயது 50), அவரது மகன் வீரபாண்டி (33), உறவினர் சுப்ரமணி, பாலா ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை செய்ததாகவும், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது முருகன் தப்பியோடிய நிலையில் அவர் மூச்சுத் திணறி இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இறந்த விசாரணை கைதி முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் முருகன் இறந்தது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை குவிந்தனர். முருகனை போலீஸ் விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.
அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இறந்த முருகனின் உறவினர்களிடம் நேற்று பகலில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் போலீசார் மாலையில் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். முருகனை விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்ற போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முருகனின் உடலை வாங்கவில்லை.
இதற்கிடையில் முருகனின் மகன் வீரபாண்டி நேற்று இரவு திருச்சி அரசு மருத்துவமனையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருட்டு வழக்கு தொடர்பாக எங்கள் 4 பேரையும் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) தனிப்படை போலீசார் விசாரணைக்காக சமயபுரம் அழைத்து சென்றனர். அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்து எங்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரும்பு குழாய்களால் அடித்தனர். மேலும் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்தனர். வலியால் அலறி துடித்தோம். நேற்று காலை முதல் இரவு வரை அடித்தனர். இதில் எனது தந்தை அங்கேயே இறந்து விட்டார். அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியாது’ என்றார். மேலும் தனது உடலில் ஏற்பட்டிருந்த காயங்களை அவர் காண்பித்தார். இறந்த முருகனின் மகன் வீரபாண்டி புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து முருகனின் உடலை நேற்று இரவு 8 மணி அளவில் அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story