திருச்செந்தூர் அருகே, வாகனம் மோதி பெண் துப்புரவு பணியாளர் பலி - மற்றொருவர் படுகாயம்
திருச்செந்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் துப்புரவு பணியாளர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் முத்து நகரைச் சேர்ந்தவர் முனியசாமி மனைவி கோமதி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் மூக்காண்டி மனைவி ஜெயலட்சுமி (45). இவரும், கோமதியும், வீரபாண்டியன்பட்டினம் கிராம பஞ்சாயத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலை செய்தனர்.
இவர்கள் தினமும் காலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சென்று, குப்பைகளை சேகரித்து, அவற்றை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாக பிரித்து, அங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் கோமதி, ஜெயலட்சுமி ஆகியோர் தங்களது வீடுகளில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் 2 பேரும் வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரம் அருகில் திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று 2 பேரின் மீதும் பின்புறமாக பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில், அந்த வாகனத்தின் டயரில் கோமதியின் சேலை சிக்கியது. இதனால் உடல் நசுங்கிய அவர் தரதரவென சாலையில் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த வாகனம் மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ஜெயலட்சுமி படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜெயலட்சுமிக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரஞ்சித்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தின் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story