கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு


கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2019 4:00 AM IST (Updated: 17 Dec 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் 3-வது நாளாக நடந்தது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலூகாவிற்கு உட்பட்ட பழவேரி கிராமத்தில் புதிய கல்குவாரி அமைப்பதற்கு காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த கிராமத்தில் 2 கல்குவாரிகள் இருக்கும் நிலையில், விதிகளை மீறி மீண்டும் புதிய கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கியதை கண்டித்து, பொதுமக்கள் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக பூஜை போடும்பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் கல்குவாரி பணிகள் தொடங்கப்பட்டது.

இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து அங்குள்ள மயானத்தில் குழந்தைகளுடன் குடியேறி போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதிகாரிகள் இதுவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று 3-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Next Story