டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மாநில தலைவர் பதவி?


டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மாநில தலைவர் பதவி?
x
தினத்தந்தி 17 Dec 2019 5:30 AM IST (Updated: 17 Dec 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை வழங்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் மேலிடம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. தினேஷ் குண்டுராவின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக முன்னாள் மந்திரியும், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கும் டி.கே.சிவக்குமாரை மாநில தலைவராக நியமிக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த அவரை நியமித்தால், அந்த சமூக வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சித்தராமையாவே நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. ஆனால் சித்தராமையா, எக்காரணம் கொண்டும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறப்போவது இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரி கிறது.

இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எம்.பி.பட்டீலுக்கும், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தலித் சமூகத்தை சேர்ந்த பரமேஸ்வருக்கும் வழங்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முக்கியமான சமூகங்களை சேர்ந்த தலைவர்களுக்கு பதவி வழங்குவதன் மூலம் அந்த சமூக மக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் பக்கம் இழுக்க முடியும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக சொல்லப்படுகிறது.

Next Story