நமது நாட்டில் 40 சதவீத உணவு தானியங்கள் வீணாகின்றன; முதல்-மந்திரி எடியூரப்பா கவலை


நமது நாட்டில் 40 சதவீத உணவு தானியங்கள் வீணாகின்றன; முதல்-மந்திரி எடியூரப்பா கவலை
x
தினத்தந்தி 17 Dec 2019 5:00 AM IST (Updated: 17 Dec 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நமது நாட்டில் 40 சதவீத உணவு தானியங்கள் வீணாகின்றன என்று முதல்-மந்திரி எடியூரப்பா கவலை தெரிவித்தார்.

பெங்களூரு, 

கர்நாடக தொழில் வர்த்தக சபை சார்பில் அடுத்த ஆண்டு (2020) நடைபெற உள்ள விவசாய உணவு கண்காட்சி மாநாட்டுக்கான முத்திரையை வெளியிடும் நிகழ்ச்சி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு முத்திரையை வெளியிட்டு பேசியதாவது:-

கர்நாடக அரசு இயற்கை விவசாய பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. விஷத்தன்மை கொண்ட கெமிக்கலை குறைத்து விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதிக்கப்படுவதை தடுக்க இயற்கை விவசாயம் தான் ஒரே வழி. இதுகுறித்து பெரிய அளவில் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த இயற்கை விவசாயம் குறித்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தாலுகாவில் விவசாயிகளை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளேன். இயற்கை விவசாயம் குறித்து சிவமொக்காவில் ஒரு பெரிய மாநாடு நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அவர்களாகவே வந்து பதிவு செய்துள்ளனர்.

2012-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நுண்ணிய நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்தினேன். ஒரு சொட்டுநீர், அதிக விளைச்சல் என்ற பெயரில் இந்த திட்டத்தை செயல்படுத்தினேன். அதிக பசியுள்ள 117 நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. நமது நாட்டில் ஒருபுறம் பசி இருக்கிறது, மற்றொருபுறம் ஆண்டுக்கு 40 சதவீத விவசாய உற்பத்தி உணவு தானியங்கள் வீணாகின்றன. இது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

உதாரணத்திற்கு ஐக்கிய நாடுகளின் அறிக்கைப்படி, இந்தியாவில் ஆண்டுக்கு 21 லட்சம் டன் கோதுமை வீணாகிறது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி. விவசாய உற்பத்தி, பாதுகாத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டு, சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்.

இந்தியாவில் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. விவசாயம், பதப்படுத்துதல் நடைமுறைகளை மாற்ற வேண்டியது அவசியம். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த நோக்கத்தில் தொழில் நிறுவனத்தினர், அதிகளவில் பதப்படுத்தும் மையங்கள், சந்தைகளை அமைக்க வேண்டும். விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவ வேண்டும்.

இத்தகைய மையங்களை நாடு முழுவதும் அமைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு உணவு பதப்படுத்துதலில் அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் அனுமதித்துள்ளது. இதன் மூலம் 8.7 பில்லியன் டாலர் முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்து கொள்ளுதல், முதலீடுகளை ஈர்த்தலுக்கு விவசாய கண்காட்சி மற்றும் மாநாடு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை அரசுக்கு தெரிவித்தால், அதை பட்ஜெட்டில் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story