களை கட்டிய உள்ளாட்சி தேர்தல்: மேளதாளம் முழங்க வந்து அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்


களை கட்டிய உள்ளாட்சி தேர்தல்: மேளதாளம் முழங்க வந்து அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 17 Dec 2019 3:45 AM IST (Updated: 17 Dec 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் மேளதாளம் முழங்க வந்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் வேட்புமனுதாக்கல் செய்ததால் களை கட்டியது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிரு‌‌ஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகைமலை ஆகிய 8 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 157 ஊராட்சிகளிலும் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளன. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 12-ம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 115-ம், கிராம ஊராட்சி தலைவர் 157-ம், கிராம ஊரட்சி வார்டு உறுப்பினர் 1,401-ம் என மொத்தம் 1,685 பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இதையொட்டி அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் கடந்த 9-ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு மட்டும் அந்தந்த ஊராட்சி செயலர் வேட்பு மனுக்களை பெற்றார்.

டிசம்பர் 16-ந்தேதி வேட்பு மனுதாக்கலுக்கு கடைசிநாள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததால், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் தங்களது கூட்டணி கட்சிகளுக்குரிய தொகுதி பங்கீட்டில் ஆர்வம் காட்டினர். ஆனால் கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சை சின்னங்களில் தான் போட்டியிட வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர், விருப்பமனுக்கள் பெற்றதன் அடிப்படையில் அதற்குரிய பொறுப்புகளுக்கு வேட்பாளர்களை நியமித்து வேட்புமனுக்களை தொடக்க நாள் முதலே ஆர்வத்துடன் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்ட அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் குறித்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு டிசம்பர் 16-ந்தேதி மனுதாக்கல் செய்ய முடிவெடுத்திருந்தனர்.

அந்த வகையில் நேற்று வேட்புமனுதாக்கலுக்கு கடைசிநாள் என்பதால் கரூர், தாந்தோணி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்புறத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் வெண்ணைமலை பாலசுப்ரமணியசாமி முருகன் கோவில் அருகேயுள்ள கரூர் ஒன்றிய அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் போலீசார், வேட்புமனுதாக்கல் செய்ய வருபவருடன் கூடுதலாக 4 பேர் மட்டுமே உள்ளே அனுமதித்தனர்.

மற்றவர்களை நுழைவு வாயிலிலே தடுத்து நிறுத்தி அங்கேயே நிற்க வைத்தனர். எனினும் அடுத்தடுத்து அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்ய வந்ததால், வேட்புமனுதாக்கல் செய்யும் அறையில் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது. இதனால் வட்டார வளர்ச்சி அதிகாரியும், ஒன்றிய தேர்தல் அதிகாரியுமான பாலசந்திரன், மைக்கில் தேர்தல் விதிகள் பற்றி எடுத்துரைத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். மேலும் தேவையில்லாமல் கூடி நின்றவர்களை போலீசார் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினார். மேலும் ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் பணியை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பொறுப்புகளுக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போக்குவரத்து துறை அமைச்சரும், அ.தி.மு.க. கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் ஒன்றிய அலுவலகத்திற்கு ஆதரவாளர்களுடன் மேள-தாளம் முழங்க புடை சூழ வந்து மனுதாக்கல் செய்தனர்.

இதேபோல் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமையில் ஆதரவாளர்களுடன் மேள-தாளம் முழங்க ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்தனர். மனுதாக்கலுக்கு வந்த கட்சி வேட்பாளர்களுக்கு பட்டாசு வெடித்து தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். அடுத்தடுத்து வந்து அ.தி.மு.க.-தி.மு.க. சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டதால் ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

அசம்பாவித சம்பவங்களை தடுக்கம் பொருட்டு போலீஸ் வீடியோ குழுவினர் கூட்டத்தை வீடியோ எடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சுயேச்சைகளும் ஆர்வத்துடன் வந்து மனுதாக்கல் செய்தனர்.

இதேபோல் தாந்தோணி ஒன்றியத்திலும் கட்சியினர் அதிகளவில் மனுதாக்கலுக்கு வந்ததால், தாந்தோணி மெயின்ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக 8 ஒன்றியங்களிலும் மாலை 5 மணி வரை வேட்புமனுதாக்கல் களை கட்டியது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் ஏதும் பட்டுவாடா செய்யப்படுகிறதா? ஊரக உள்ளாட்சி பதவிகள் ஏலம் முறையில் ஜனநாயகத்திற்கு விரோதமாக தேர்வு செய்யப்படு கிறதா? என தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர்.

Next Story