எனக்கு மந்திரியாக வேண்டும் என்ற ஆசை உள்ளது; எம்.டி.பி.நாகராஜ் பேட்டி


எனக்கு மந்திரியாக வேண்டும் என்ற ஆசை உள்ளது; எம்.டி.பி.நாகராஜ் பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2019 4:30 AM IST (Updated: 17 Dec 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

எனக்கு மந்திரியாக வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று எம்.டி.பி.நாகராஜ் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட எம்.டி.பி.நாகராஜ் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் பா.ஜனதாவின் போட்டி வேட்பாளர் சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றார். இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று எம்.டி.பி.நாகராஜ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு எம்.டி.பி.நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது தொகுதி வளர்ச்சி பணிகள் தொடர்பாக முதல்-மந்திரியை சந்தித்து பேசினேன். சில பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அதுகுறித்து அவருடன் விவாதித்தேன். ஒசக்கோட்டையில் எனது தோல்விக்கு பச்சேகவுடா எம்.பி. மற்றும் அவரது மகன் சரத் பச்சேகவுடா ஆகியோர் காரணம். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சரத் பச்சேகவுடாவை பா.ஜனதாவில் மீண்டும் சேர்த்து கொள்ளக்கூடாது என்று எடியூரப்பாவிடம் கூறினேன்.

எனக்கு ஆதரவு வழங்குவதாக கூறிய சரத் பச்சேகவுடா பிறகு என்னை ஏமாற்றிவிட்டார். கட்சி விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். எனக்கும் மந்திரியாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. மந்திரியாக யாருக்கு தான் ஆசை இருக்காது சொல்லுங்கள். எங்களின் நிலை எடியூரப்பாவுக்கு தெரியும்.

மந்திரி பதவி குறித்து எடியூரப்பா எனக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை. அவர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்திக்க மாட்டேன். மாநில தலைவர்களே முடிவு எடுக்கட்டும். கேட்க வேண்டியதை நான் கேட்டுள்ளேன். மந்திரிசபை விரிவாக்கம் எப்போது நடைபெறும் என்று எனக்கு தெரியாது. நான் எம்.எல்.ஏ. கிடையாது.

இவ்வாறு எம்.டி.பி.நாகராஜ் கூறினார்.

Next Story