வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: வேட்பாளர்கள் குவிந்ததால் கிருஷ்ணகிரியில் போக்குவரத்து பாதிப்பு
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் ஆதரவாளர்களுடன் ஏராளமான வேட்பாளர்கள் வந்ததால் கிருஷ்ணகிரியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 333 ஊராட்சி மன்ற தலைவர்கள், 3 ஆயிரத்து 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 221 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 586 பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். இதனால் மாவட்டத்தில் உள்ள 10 வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. குறிப்பாக மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு, அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதற்காக, தங்களது ஆதரவாளர்களுடன் வேட்பாளர்கள் வந்தனர். இதனால் கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ள பெங்களூரு சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். நேற்று காலை முதல் மாலை வரை பெங்களூரு சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
அதே போல ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட வேட்பாளர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன் ஆர்வத்துடன் ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குவிந்தனர். கடைசி நாளான நேற்று காலை 10.30 மணி முதல் 12 மணிவரை எமகண்டம் என்பதால், ஒருசிலர் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். நண்பகல் 12 மணியை கடந்ததும், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அதன்படி அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தங்கள் மனுக்களை ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.
மாலை 3.30 மணி நிலவரப்படி, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும், ஓசூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 37 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்த நிலையில், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் மனுதாக்கல் செய்ததாக தெரியவில்லை.
வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியையொட்டி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஓட்டல்கள், ஜெராக்ஸ் கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.
Related Tags :
Next Story