சிவகிரி அருகே, வயலில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - 2 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்
சிவகிரி அருகே வயல்களில் காட்டு யானைகள் புகுந்து சுமார் 2 ஏக்கர் நெற்பயிர்களை நாசம் செய்து, அட்டகாசத்தில் ஈடுபட்டன.
சிவகிரி,
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் தேவர் மேட்டு தெருவை சேர்ந்தவர்கள் முனியான்டி மகன்கள் ரமேஷ் (வயது 41), கருப்பசாமி (39). 2 பேரும் விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி பழியன்பாறை அருகே உள்ளது.
இங்கு அவர்கள் நெற்பயிர்கள் பயிரிட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பிற்காக வயல்களை சுற்றி கற்கள் நட்டு முள்வேலி அமைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 2 காட்டு யானைகள், 1 குட்டி யானை ஆகியவை வயல்களை சுற்றி அமைத்திருந்த முள்வேலியை நாசப்படுத்தி, நடப்பட்டிருந்த கற்களை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட் டன.
மேலும் வயல்களுக்குள் இறங்கி அங்கு சுமார் 2 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை நாசப்படுத்திவிட்டு சென்றுவிட்டன. நேற்று காலை 2 பேரும் தங்களது தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நெற்பயிர்களை யானை நாசப்படுத்தி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் வனத்துறையினர் காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்களுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story