வேட்புமனு தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் குவிந்த வேட்பாளர்கள் - போலீசாருடன் வாக்குவாதம்


வேட்புமனு தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் குவிந்த வேட்பாளர்கள் - போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 17 Dec 2019 4:00 AM IST (Updated: 17 Dec 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

வேட்புமனு தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் வேட்பாளர்கள் குவிந்ததால் வத்திராயிருப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்திராயிருப்பு,

நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய ஒன்றிய அலுவலகங்களில் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. மொத்தம் 13 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 1 மாவட்ட வார்டு உறுப்பினர், 27 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 207 வார்டு உறுப்பினர்கள் என ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக நேற்று வத்திராயிருப்பில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் குவிந்தனர்.

கிராமப்புறங்களில் இருந்து தங்களது ஆதரவாளர்களை வேன்கள் மற்றும் கார்களில் வேட்பாளர்கள் அழைத்து வந்ததால் வத்திராயிருப்பில் பல இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று ஏராளமானோர் குவிந்ததால் 100 மீட்டர் தொலைவிலேயே அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் வேட்பாளர்கள் உடன் வந்த ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் உள்ள காலி இடங்களிலும் வத்திராயிருப்பில் இருந்து அர்ச்சுனாபுரம் செல்லும் சாலையில் இந்து மேல் நிலைப்பள்ளி அருகிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். வேட்பாளர்கள் உடன் வந்த கிராமத்தினர் அனைவரும் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story