குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை எரிக்க முயன்றவர்கள் கைது
காரைக்குடியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை எரிக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி பெரியார் சிலை அருகில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அதன் தோழமை கட்சிகளுடன் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சகுபர் சாதிக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பகல் நிலா பாலு தொடங்கி வைத்தார். பழனிபாபா பேரவை மாநில செயலாளர் நவ்ஷாத் அலிகான் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சிவாஜி காந்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் அப்துல்மஜீத், நகர செயலாளர் சித்திக், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் வைகறை, நகர தலைவர் ஜெகதீசன், ஆதித் தமிழர் துணை பொதுச்செயலாளர் திருமுருகசெல்வம், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாவெல், தமிழர் முன்னணி அமைப்பாளர் இமயம் சரவணன், பச்சைத் தமிழகம் மாவட்ட பொறுப்பாளர் தமிழ் கார்த்திக் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முஸ்லிம்களையும், இலங்கை தமிழர்களையும் நாடற்றவர்களாக மாற்ற முயற்சி செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி அந்த மசோதாவின் நகலை எரிக்க முயன்றனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காரைக்குடி வடக்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன், பழனி பாபா பேரவை மாநில செயலாளர் நவ்சாத் அலிகான், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சகுபர்சாதிக், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அரங்கசாமி உள்பட 20 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story