பொதுப்பணித்துறை என்ஜினீயரை தாக்கிய வழக்கில் டிரைவர் கைது - அரசு ஒப்பந்ததாரர் கூலிப்படையை ஏவியது அம்பலம்


பொதுப்பணித்துறை என்ஜினீயரை தாக்கிய வழக்கில் டிரைவர் கைது - அரசு ஒப்பந்ததாரர் கூலிப்படையை ஏவியது அம்பலம்
x
தினத்தந்தி 17 Dec 2019 5:36 AM IST (Updated: 17 Dec 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் பொதுப் பணித்துறை என்ஜினீயரை தாக்கிய வழக்கில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 53). புதுவை அரசின் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று செல்வராஜ் சத்யாநகர் பகுதியில் சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 நபர்கள், இரும்பு கம்பியால் அவரை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் செல்வராஜை தாக்கிய நபர்களை தேடிவந்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் செல்வராஜை தாக்கியது கூலிப்படையாக செயல்பட்டு வரும் செயின்ட்பால்பேட் நிவாஸ், ஜீவானந்தபுரம் தமிழ், சந்துரு, அருண், கிஷோர் என்பதும், புதுவை கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டிடமான பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி கூலிப்படையை ஏவி தாக்கியதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தியின் கார் டிரைவரான திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த சுபாஷ் (21) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து சுபாஷை போலீசார் கைது செய்தனர்.

கைதான சுபாஷ் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
புதுவை கடற்கரை சாலையில் மேரி கட்டுமான பணி பொதுப்பணித்துறை என்ஜினீயர் செல்வராஜ் மேற்பார்வையில் நடந்து வந்தது. இந்த கட்டிட கட்டுமான பணியை ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி மேற்கொண்டு வருகிறார். கட்டுமான பணிகளில் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதனால் செல்வராஜை மிரட்ட சொல்லி என்னிடம் கிருஷ்ணமூர்த்தி சொன்னார். அதன்படி ரூ.3 லட்சம் கொடுத்து கூலிப்படை மூலமாக அவரை தாக்கி மிரட்ட ஏற்பாடு செய்தேன். இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Next Story