சத்ரபதி சிவாஜி நினைவு சின்ன திட்டத்தில் ஊழல்: விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவு
சத்ரபதி சிவாஜி நினைவு சின்ன திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.
மும்பை,
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு மும்பை அரபிக்கடலில் பிரமாண்ட நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. முந்தைய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியின் போது, இந்த திட்டத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இந்த ஊழல் தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சத்ரபதி சிவாஜி நினைவுச்சின்ன திட்டத்தின் ஆரம்ப விலை டெண்டர் ரூ.2 ஆயிரத்து 692 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரூ.3 ஆயிரத்து 826 கோடிக்கு ஒப்பந்த பணி கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே இதில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்து உள்ளது.
நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் அடிகோடிட்டு காட்டப்பட்டு உள்ளது.
இந்த திட்ட முறைகேடுகள் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதை வரவேற்கிறோம். இந்த முறைகேடு குறித்த விரிவான விசாரணை மூலம் பாரதீய ஜனதாவின் ஊழல் முகம் வெளிப்படும்.
சத்ரபதி சிவாஜியை மதிக்காதவர்கள் தான் அவரது நினைவுச்சின்ன திட்டத்தில் ஊழலில் ஈடுபட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story