கள்ளத்தனமாக படகு மூலம் தப்பிசெல்ல முயன்ற இலங்கை அகதிகள் 6 பேர் கைது
இலங்கைக்கு கள்ளத்தனமாக படகு மூலம் தப்பி செல்ல முயன்ற சிறுவன் உள்பட இலங்கை அகதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு அகதிகள் படகு மூலம் தப்பி செல்ல உள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள இரட்டைதாழை மற்றும் கோண்டராமர் கோவிலுக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடற்கரை பகுதியில் கையில் பேக் மற்றும் பெட்டிகளுடன் வந்த 6 பேரை பிடித்து விசாரணை செய்து சோதனை செய்த போது அவர்கள் 6 பேரும் இலங்கை அகதிகள் என்பதும் இலங்கைக்கு தப்பி செல்ல வந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாராணை செய்தனர்.
இதில் இலங்கை யாழ்ப்பாணம் வேளனையை சேர்ந்த சதீஷன் (வயது40), அவருடைய மனைவி டிலக்சனா (30) கடந்த 2012-ம் ஆண்டு விமானம் மூலம் தமிழகம் வந்து சென்னையில் எந்த ஒரு பதிவும் இல்லாமல் வசித்து வந்துள்ளனர்.
மேலும் சுதாகரன் (39), அவருடைய மனைவி சந்திரமதி (36), மகன் ஹரிஷ்கரன் (10) என்பதும் இவர்கள் கள்ளத்தனமாக படகு மூலம் வந்து சென்னையில் வசித்து வந்துள்ளனர். பிடிபட்டவர்களில் மற்றொருவரான உதய்குமார் (40) இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கள்ளத்தனமாக படகு மூலம் தமிழகம் வந்து சென்னையில் பதிவு இல்லாமல் தங்கி இருந்துள்ளார். இவர்கள் 6 பேருமே சென்னையில் பல இடங்களில் எந்தவொரு பதிவும் இல்லாமல் பல வருடங்களாக தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 15-ந்தேதி இரவு ராமேசுவரம் பஸ் நிலையத்திற்கு வந்த இவர்களை அங்கு வந்த ஒருவர் அழைத்துச்சென்று ராமேசுவரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 2 அறைகள் எடுத்து தங்க வைத்துள்ளார். அதன்பின்னர் 16-ந் தேதி பகல் 2 மணிக்கு அங்கிருந்து வாகனம் ஒன்றில் ஏறி தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற்கரையில் வந்திறங்கி உள்ளனர். அங்கிருந்து இலங்கையில் இருந்து வரும் படகில் ஏறி தப்பி செல்ல திட்டமிட்டு இருந்தபோது போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
பிடிபட்ட 6 பேரையும் கியூ பிரிவு போலீசார் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் திலகராணி,சப்-இன்ஸ்பெக்டர் இந்திரன் உள்ளிட்ட போலீசார் இலங்கை அகதிகள் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் அவர்கள் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர். இலங்கைக்கு தப்பி செல்ல முயன்று கைதான 6 பேரில் 3 பேரிடம் இந்திய ஆதார் அடையாள அட்டை இருப்பதும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story