மதுரையில் புதிதாக தொடங்கப்பட்ட 3 சுங்கச் சாவடிகளுக்கு தடை கோரி மேலும் ஒரு வழக்கு


மதுரையில் புதிதாக தொடங்கப்பட்ட 3 சுங்கச் சாவடிகளுக்கு தடை கோரி மேலும் ஒரு வழக்கு
x
தினத்தந்தி 17 Dec 2019 10:15 PM GMT (Updated: 17 Dec 2019 3:05 PM GMT)

மதுரையில் புதிதாக தொடங்கப்பட்ட 3 சுங்கச்சாவடிகளுக்கு தடை விதிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை கீழமாரட் வீதியில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தற்போது மஸ்தான்பட்டி (சிவகங்கை சாலை சந்திப்பு), சிந்தாமணி, பரம்புபட்டி (மதுரை விமான நிலையம் அருகில்) ஆகிய 3 இடங்களில் சுங்கக்கட்டண மையம் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.

ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் மதுரை மாவட்டத்தில் மேலூர் சாலையில் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என 3 சுங்கக்கட்டண மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக 3 சுங்கக்கட்டண மையங்கள் தொடங்கப்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே புதிதாக தொடங்கப்பட்டுள்ள மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புபட்டி ஆகிய இடங்களில் உள்ள 3 சுங்கக்கட்டண மையங்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பாசத்திய நாராயணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு, டிவி‌ஷன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்குடன் இதை விசாரிக்க பட்டியலிடும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story