தொடர் மழை காரணமாக ஓட்டேரி ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியது - விவசாயிகள் மகிழ்ச்சி


தொடர் மழை காரணமாக ஓட்டேரி ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியது - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 18 Dec 2019 3:30 AM IST (Updated: 17 Dec 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக, ஓட்டேரி ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியது. இதனால் அந்தப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுக்கம்பாறை, 

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஓட்டேரி ஏரியும் ஒன்று. நாயக்கனேரி மற்றும் குளவிமேடு மலைப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் வாணியங்குளம், மேட்டு இடையம்பட்டி கிராமத்தை ஒட்டிச் செல்லும் மழைநீர் கால்வாய் மூலம் ஓட்டேரி ஏரியை சென்றடைகிறது. மலைகளில் இருந்து வரும் மழைநீரே, இந்த ஏரிக்கு நீராதாரமாக உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக ஓட்டேரி ஏரியில், மாநகராட்சி சார்பில் 3-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேலும் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலங்களும், இந்த ஏரிநீர் பாசனத்தையே நம்பி உள்ளது. இந்த ஏரி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பெய்த கனமழையின்போது, நிரம்பி வழிந்தோடியது. அப்போது ஏரி தூர்வாரப்படாமலும், கரைகள் பலப்படுத்தப்படாமலும் இருந்ததால் சில மாதங்களிலேயே நீர் வற்றத்தொடங்கியது. சுமார் 8 மாத காலத்திற்குள் ஓட்டேரி ஏரியில் நீர்வற்றிப்போனது. ஏரி தூர்வாராமலும், கரைகள் வலுவிழந்தும் இருப்பதே குறுகிய காலத்தில் நீர் வற்றியதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர். இதனைத்தொடர்ந்து ஓட்டேரி ஏரியை தூர்வாருவதுடன், கரையைப் பலப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன்காரணமாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் ஏர் உழும் பணியை முடித்து, மானாவரி பயிராக கடலை, துவரை, கொள்ளு, சோளம், கம்பு உள்ளிட்டவைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் நெல் பயிர் நடவிலும் ஈடுப்பட்டுள்ளனர். பனிப்பொழிவு காலம் தொடங்கிய நிலையிலும், வேலூர் மாவட்டத்தில் அடிக்கடி மழை பெய்துவருவதால் விவசாயம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

தொடர் மழை காரணமாகவேலூரை அடுத்துள்ள நாயக்கனேரி மற்றும் குளவிமேடு மலைப்பகுதிகளில் நீரூற்று ஏற்பட்டுள்ளது. இந்த ஊற்றுநீர் மழைநீர் கால்வாய்கள் மூலம், ஓட்டேரி ஏரிக்கு சென்றடைய தொடங்கியுள்ளது. கனமழை பெய்யாவிட்டாலும், நீரூற்று மூலம் ஓட்டேரி ஏரிக்கு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கால்வாயில் தண்ணீர் செல்வதை தொடர்ந்து, ஏரியின் ஒரு பகுதி ஓரளவுக்கு நிரம்பியுள்ளது. விரைவில் ஏரி முழுவதும் நிரம்புவதுடன், அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் குடிநீருக்கும் பஞ்சம் வராது என அந்த பகுதிமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஓட்டேரி ஏரிக்கு, நாயக்கனேரி, குளவிமேடு கிராமங்களில் இருந்து மழைநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்துபோய், முட் செடிகள் அதிகளவில் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. எனவே தூர்வாரப்படாமல் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story