உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் - அதிகாரி தகவல்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தேர்தல் பார்வையாளர் ராஜசேகர் கூறியுள்ளார்.
அரியலூர்,
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான அரியலூர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை தேர்தல் பார்வையாளர் ராஜசேகர், மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தேர்தல் பார்வையாளர் ராஜசேகர் கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 201 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 1662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி யிடங்களுக்கும் என அரியலூர், செந்துறை மற்றும் திருமானூர் ஆகிய ஒன்றியங்களுக்கு வருகிற 27-ந் தேதியும், ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரியலூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையமான அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையினை பார்வையிடப்பட்டது. இந்த மையம் முழுவதையும் கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், அரியலூர் ஒன்றியத்திற்கு மொத்தம் 168 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு வார்டுக்கும் வாக்குச்சீட்டுகளை பிரிப்பதற்கு 15 மேஜைகளும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வாக்குகளை எண்ண 6 மேஜைகளும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான வாக்குகளை எண்ண 6 மேஜைகளும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 மேஜைகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 10 மேஜைகளும் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரியலூர் ஒன்றியத்திற்கான வேட்பு மனு பரிசீலனையும், மேலும் தயார் நிலையில் உள்ள வாக்குப்பெட்டிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 9840361218 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர், வளர்ச்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story