ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி, கருப்பு சட்டை அணிந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி திருச்சியில் வணிகர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி, திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க மாநில தலைவர் கே.மனோகரன், தமிழ்நாடு கார் டீலர்ஸ் அண்ட் கன்சல்டன்ட் நலச்சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சிவகுமார் மற்றும் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான வணிகர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஆன்-லைன் மூலம் வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் மருந்துகள் விற்பனை செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடை செய்திட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு பேசிய தாவது:-
இந்திய தொழில் வணிகத்தை முற்றிலும் சீரழித்து வரும் ஆன்-லைன் வணிகத்தை அதன் அறிமுக நிலையில் இருந்தே எதிர்த்து வருகிறோம.் இது இந்திய தொழில் வணிகத்தை நசுக்கி விடும். ஆன்-லைன் வணிகம் என்னும் ஆக்டோபஸ் தனது கோரப்பிடியை விரிவுப்படுத்தி கொண்டே செல்கிறது. சில்லறை வணிகத்தில் அதிகம் படிக்காதவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி குறைந்த கல்வி அறிவு கொண்ட பலகோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக உள்ளது.
நேரடி வணிகம் என்பது பொருட்களின் தன்மையை சோதித்து, தரத்தை பார்த்து திருப்தி அடைந்து வாங்குவது என விற்பவருக்கும், வாங்குபவருக்கும் நேரடி தொடர்பு இருக்கும். மேலும், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக வரிகள் செலுத்தி செய்யப்படுவதாகும். எங்களது ஜி.எஸ்.டி. வரியானது பல லட்சம் கோடி ரூபாய்க்கு தாண்டி சென்றிருக்கிறது. ஆனால், ஆன்-லைன் வணிகர்களை காப்பாற்ற முற்படும் அரசு, சிறு வணிகர்களை காப்பாற்ற மறந்து விட்டது. அத்துடன் ஆன்-லைன் வணிகமானது எந்த வரையறைக்கும் உட்படாமல் இயங்கி வருகிறது.
வணிகர்களை வறுத்தெடுக்கும் அதிகாரிகள், ஆன்-லைன் வணிகத்தை கண்டு கொள்வதில்லை. அவற்றை கட்டுப்படுத்த விடுத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஆன்-லைன் வர்த்தகம் என்பது நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் விதமாக அந்நிய நேரடி முதலீட்டை திணித்து, இந்தியாவில் மறைமுக பொருளாதார தாக்குதலை ஊக்குவித்து, வணிக வாழ்வாதார இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பை உருவாக்கும் சதித்திட்டமாகும்.
மத்திய அரசு வணிகர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால் வருகிற ஜனவரி மாதம் 6 மற்றும் 7-ந் தேதிகளில் டெல்லியில் அகில இந்திய வணிகர் சங்கங்களின் சார்பில் நடக்கும் கூட்டத்தில் அகில இந்திய அளவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். அது ஒரு விபத்தை அல்லது ஆபத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும். எனவே, அரசு இதை கவனத்தில் கொண்டு எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இல்லையென்றால் இனி ஒவ்வொரு மாதமும் ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்படும். அந்த போராட்டமானது தீவிரமடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story