இருவேறு இடங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது


இருவேறு இடங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2019 3:30 AM IST (Updated: 18 Dec 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு இடங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பதாக அடையாறு காவல் துணை கமிஷனர் பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவருடைய தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கண்ணகி நகரை சேர்ந்த வீரமருது (வயது 28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னர் அவரை செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நடத்திய விசாரணையில் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய 8 மாடிகள் கொண்ட குடியிருப்பில் இருந்த வீரமருதுவின் நண்பர்களான சுபாஷ் (25), சந்தோஷ் (27) ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 7 கத்திகளை போலீசார் கைப்பற்றினர். போலீஸ் விசாரணையின் அடிப்படையில் அதே பகுதியில் உள்ள பார்வதி என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 13 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. பார்வதி தலைமறைவாகி விட்டார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகே நேற்று ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீப்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி கையில் பையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 2 கிலோ 600 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தீலிப்குமார் 2 பேரையும் ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார். விசாரணையில் அவர்கள் புதுபெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (43), ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்த சரண்குமார் (19) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.

Next Story