அமல்படுத்துவதில் பாறையை போல் உறுதியாக உள்ளோம்; குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை - அமித்ஷா திட்டவட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு பாறையை போல் உறுதியாக இருக்கிறது. திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
மும்பை,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை ஏற்பட்டது.
நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று மும்பையில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு பாறையை போல உறுதியாக இருக்கிறது. இதில் சிறுபான்மையினருக்கு எதிராக எதுவும் இல்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போராட்டத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குடியுரிமை சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை முன்னெடுக்கின்றன. ராகுல்காந்தி வீர சாவர்க்கராக இருக்க முடியாது. அதற்கு நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். அர்ப்பணிப்பும் தேவை.
நாட்டின் தலைநகர் டெல்லியில் அமைதி நிலவுவதை உறுதி செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story