கடலூரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை


கடலூரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2019 3:30 AM IST (Updated: 18 Dec 2019 6:19 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர்,

கடலூர் சுப்புராயலுநகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சையது உசேன். இவர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சலீம் மாலிக் (வயது 26). என்ஜினீயரான இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை சலீம் மாலிக் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு வீட்டில் இருந்தவர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு தூங்கி விட்டார். ஆனால் நேற்று காலை வெகு நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ள போலீஸ்காரர்கள் அவரது அறைக்கதவை உடைத்து பார்த்தனர். அங்கே சலீம் மாலிக் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கதறி அழுதார். பின்னர் இது பற்றி தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதன்பிறகு இறந்த சலீம் மாலிக் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சலீம் மாலிக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story