வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வெங்கிடசமுத்திரம், ஆலங்குளம், சேட்டன்குளம் உள்ளிட்ட 7 குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. மேலும் அந்த பகுதியில் முருங்கை, அவரை சாகுபடி பாதிக்கப்பட்டது.
சில இடங்களில் முருங்கை, அவரை காய்ந்து போயின. இந்தநிலையில் 58-ம் கால்வாயில் இருந்து விருவீடு பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கடந்த மாதம் விருவீடு பொதுமக்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வைகை அணையில் இருந்து, கடந்த 2 நாட்களாக 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
கால்வாயில் வந்த தண்ணீரை நேற்று மேலஅச்சனம்பட்டி அருகே உள்ள மடையை திறந்து விருவீடு வெங்கிடசமுத்திரம் குளத்துக்கு தண்ணீரை விட்டனர். தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குளத்துக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
மேலும் உசிலம்பட்டி பகுதிக்கு தண்ணீர் போய் சேர வேண்டும் என்பதால் விருவீடு பகுதிக்கு 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்து விட முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவ்வாறு 10 நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்து விட்டால் குளம் பாதியளவு கூட நிரம்பாது.
எனவே குறைந்த பட்சம் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கூறி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் விருவீடு காளியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story