செய்யாறு அருகே, காரை மறித்து தம்பதியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு - தப்பிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
செய்யாறு அருகே காரை மறித்த கும்பல் தம்பதியை தாக்கி 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியது.
செய்யாறு,
செய்யாறு தாலுகா செங்காடு கிராமத்தில் கடந்த 13-ந்தேதி ஸ்கூட்டரில் சென்ற தலைமை ஆசிரியையை வழிமறித்து 5 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச்சென்றனர். இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள் காரில் சென்றவர்களை மர்மகும்பல் தாக்கி நகையை பறித்துச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மகன் முருகன்(வயது 50), அவரது மனைவி சுமதி மற்றும் உறவினர்கள் ரவிச்சந்திரன், விஜயகுமார், லலிதா ஆகியோர் வந்தவாசி தாலுகா விளாநல்லூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்றனர். பின்னர் அவர்கள் மாலை 7 மணியளவில் ராணிப்பேட்டைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
செங்காடு அருகிலுள்ள அம்மாபாளையம் பகுதியில் சென்றபோது எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், காரினை வழிமறித்து டிரைவரிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் காருக்குள் இருந்தவர்களை தாக்கிய அந்த கும்பல், சுமதி அணிந்திருந்த 5 பவுன் நகை, அவரது கணவர் முருகன் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 செல்போன்களை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த முருகன், சுமதி ஆகியோர் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story