கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில், ஓட்டு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு


கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில், ஓட்டு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Dec 2019 3:45 AM IST (Updated: 18 Dec 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார்.

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 17 ஒன்றிய கவுன்சிலர், 34 ஊராட்சி தலைவர், 262 ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு ஓட்டு எண்ணும் மையமாக டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஓட்டு எண்ணும் மையத்தை நேற்று முன்தினம் தேர்தல் பார்வையாளர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓட்டுபதிவுக்கு பிறகு பெட்டிகள் வைப்பதற்கு ஒரு அறையும், வாக்கு சீட்டுகளை பிரிப்பதற்கு ஒரு அறையும், ஊராட்சி உறுப்பினர்களுக்கு 5 அறைகளும் அமைக்கப்படுகிறது. ஊராட்சி தலைவருக்கான ஓட்டு எண்ணிக்கைக்கு 3 அறைகளும், ஒன்றிய கவுன்சிலருக்கு ஓட்டு எண்ணிக்கைக்கு 3 அறைகளும், மாவட்ட கவுன்சிலருக்கு ஒட்டு எண்ணிக்கைக்கு 2 அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இதை தவிர வாக்குபதிவை கண்காணிக்க ஒரு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறைகளில் உள்ள பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தேர்தல் பார்வையாளர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார். அப்போது செயற்பொறியாளர் பசுபதி, கிணத்துக்கடவு தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி இயக்குனருமான முருகேசன், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோன்று பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஆச்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியை தேர்தல் பார்வையாளர் கோவிந்தராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வாக்காளர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஓட்டு எண்ணும் மையங்களான புளியம்பட்டியில் உள்ள பி.ஏ. கல்லூரியிலும், தெற்கு ஒன்றியத்தில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் பார்வையாளர் கோவிந்தராஜ் கூறுகையில், பொள்ளாச்சி,கிணத்துக்கடவு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள ஓட்டுஎண்ணும் மையங்கள் பாதுகாப்பாக உள்ளது. மேலும் சிறப்பான முறையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. மின் விசிறி, மின் விளக்குகள் போதிய அளவில் பொருத்த அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. மேலும் எந்தெந்த அறைகளில் வாக்கு சீட்டுகள், ஓட்டு பெட்டிகளை வைப்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது என்றார்.

Next Story