வேலூர் மாவட்டத்தில் 44 இடங்களில் காளைவிடும் விழா நடத்த அனுமதி - கலெக்டர் தகவல்


வேலூர் மாவட்டத்தில் 44 இடங்களில் காளைவிடும் விழா நடத்த அனுமதி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Dec 2019 4:00 AM IST (Updated: 18 Dec 2019 11:30 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 44 இடங்களில் காளைவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

வேலூர்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காளைவிடும் விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா நடத்துவதற்கான விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு 44 இடங்களில் காளைவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழா நடத்த பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறினால் விழா அனுமதி ரத்து செய்யப்படும். விழாக்குழுவினர் காளைவிடும் விழா நடைபெறும் தேதியை முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

விழாவில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை விழாக்குழுவினர் உதவி கலெக்டரிடம் தெரிவித்து முன்அனுமதி பெற வேண்டும். விழாவில் பங்கேற்பவர்கள் குறித்த விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை விழாக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.

ஆய்வுக்கு பின்னரே காளைகள் அனைத்தும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படும். காளைகளுக்கு மது, ஊக்க மருந்துகள் மற்றும் போதை மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டால் அந்த காளைகள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. அதேபோன்று காளைகளை துன்புறுத்தக் கூடாது. விதிமுறைகளை மீறி நடக்கும் விழாக்குழு அமைப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு விதிகளை கடைப்பிடிக்காமல் நடத்தினால் விழா உடனடியாக நிறுத்தப்படும். தொடர்ந்து அங்கு விழா நடைபெறாதபடி நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விழாக்குழுவினர் அரசின் கட்டுப்பாடுகள், விதிமுறைகளை பின்பற்றி காளைவிடும் விழாவை நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தாட்சாயினி, தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story