2-வது பயிற்சி வகுப்பிற்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் கட்டாயம் வர வேண்டும் - கலெக்டர் உத்தரவு


2-வது பயிற்சி வகுப்பிற்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் கட்டாயம் வர வேண்டும் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 19 Dec 2019 4:00 AM IST (Updated: 19 Dec 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

2-வது பயிற்சி வகுப்புக்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தும் பணிக்காக பல்வேறு துறைகளை சார்ந்த அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு கடந்த 15-ந் தேதி நடந்தது.

தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டு உள்ளவர்களில் 1995-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் படி கர்ப்பணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்து இதர அனைத்து பணியாளர்களும் கட்டாயம் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டும். இருப்பினும் கடந்த 15-ந் தேதியன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு சில அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவில்லை.

மேற்படி பயிற்சி வகுப்பிற்கு வருகை தராத அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு அறிவிப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. எனவே தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு வருகிற 22-ந் தேதியன்று நடைபெறும் 2-வது பயிற்சி வகுப்பிற்கு கட்டாயம் வர வேண்டுமென்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பிற்கு வரத்தவறினால், தொடர்புடைய பணியாளர்கள் மீது எவ்வித முன் அறிவிப்புமின்றி தமிழ்நாடு குடிமை பணி விதிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், பயிற்சிக்கு வருகை தராத பணியாளர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி கடிதம் பெற்ற பின்னரே அவர்களை பணியில் சேர்க்க மாவட்ட அளவிலான துறைத் தலைவர்களால் அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி தகவல் தெரிவித்து உள்ளார்.

Next Story