குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: கடலூரில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் நேற்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது. பின்னர் இந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து கடந்தவாரம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
ஆனால் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாநிலங்களில் வன்முறை வெடித்தது. பஸ்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. ரெயில்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. கலவரம் நடந்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கட்டுப்படுத்தினர். தமிழகத்திலும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தின.
இவ்வாறாக குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்களத்தில் மாணவர்களும் குதித்து உள்ளனர். தலைநகர் டெல்லி தொடங்கி தமிழகத்தில் சென்னை, கோவை என்று பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தின் முன்பு திடீரென ஒன்று திரண்டனர். பின்னர் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது, மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story