சிறைகளில் தண்டனை அனுபவித்து விடுதலையாகும் ஆதரவற்றோர் எத்தனை பேர்? ஆய்வு நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சிறைகளில் தண்டனை அனுபவித்து விடுதலையாகும் ஆதரவற்றோர் எத்தனை பேர்? ஆய்வு நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Dec 2019 3:30 AM IST (Updated: 19 Dec 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

சிறைகளில் தண்டனை அனுபவித்து விடுதலையாகும் ஆதரவற்றோர் எத்தனை பேர்? என ஆய்வு நடத்தும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மதுரை சின்ன சொக்கிகுளத்தை் சேர்ந்த கே.ஆர்.ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

சிறைகளில் உள்ள கைதிகள் தங்களின் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவின்றி தவிக்கின்றனர். இவர்களை போன்றவர்களுக்காக அரசு சார்பில் சிறைகளில் இருந்து விடுதலையானவர்களை பாதுகாக்கும் சங்கம் அமைக்கப்பட்டு, காப்பகம் தொடங்கப்பட்டது. இதன் நிர்வாகிகளாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்ளனர்.

ஆனால் இந்த காப்பகத்துக்கு யாரும் வருவதில்லை என்று கூறி, கடந்த 2000-ம் ஆண்டு மூடப்பட்டது. ஆண்டுதோறும் சிறைகளில் இருந்து விடுதலை ஆனவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த ஒரு ஆதரவும் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தண்டனை அனுபவித்து விடுதலையானவர்களை பாதுகாக்க மாவட்டந்தோறும் பாதுகாப்பு விடுதிகள் அமைக்கவும், சிறைகளில் இருந்து விடுதலை ஆனவர்களுக்கு உதவி செய்வதற்காக உள்ள சங்கத்தை மறு சீரமைப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் அழகுமணி ஆஜராகி, “சிறைகளில் இருந்து விடுதலையாகி வருபவர்களை பெரும்பாலும் யாரும் ஆதரிப்பதில்லை. அவர்களை போன்றவர்களுக்காக தொடங்கப்பட்ட காப்பகங்களையும் மூடிவிட்டனர். இதனால் ஏராளமானவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் உள்ளனர். சிறைகளில் இருந்து விடுதலையானவர்களை பாதுகாக்க தொடங்கப்பட்ட சங்கத்திற்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றை மோசடி செய்யும் நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்படுகின்றன” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரரின் கோரிக்கை நல்ல நோக்கம் கொண்டது. தமிழக சிறைகளிலிருந்து ஆதரவற்றவர்களாக விடுவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து மனுதாரர் 3 மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவருக்கு இலவச சட்ட உதவி மையம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழக சிறைத்துறை அதிகாரிகள் ஆகியோர் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Next Story