ஊரக உள்ளாட்சி தேர்தல்; ஏற்பாடுகள் தீவிரம் - கலெக்டர் தகவல்
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மாவட்ட ஊராட்சி அலுவலகம் மற்றும் 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட ஊராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி ஒன்றிய அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலா்களாக பணி மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் முதல்கட்டமாக, வருகிற 27-ந்தேதி சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானா மதுரை, திருப்புவனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. 2-ம் கட்டமாக 30-ந்தேதி திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல், தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகின்றன.
சிவகங்கை மாவட்டத்திற்கு, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கருணாகரன், மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணித்து வருகிறார்.
பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை 94899 10198 என்ற தேர்தல் பார்வையாளர் செல்போன் எண்ணிற்கு தெரிவிக்கலாம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில் செயல்படும் முகாம் அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பார்வையாளர் அவர்களை நேரில் சந்தித்து தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும், கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செயல்படும் 1077 கட்டணமில்லா தொலைபேசியிலும் மற்றும் 04575 - 246233 என்ற தொலைபேசியிலும் தெரிவிக்கலாம். பதிவு செய்யப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஊடக மையம் அமைக்கப்பட்டு தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் தேர்தல் தொடர்பான தகவல்கள் கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேவையான தகவல்களை பெற்று சிறந்த முறையில் தேர்தலை நடத்தி முடித்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story