காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார் குடியாத்தம் கோர்ட்டில் சரண்


காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார் குடியாத்தம் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 19 Dec 2019 4:30 AM IST (Updated: 19 Dec 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார் குடியாத்தம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

குடியாத்தம், 

வேலூரை அடுத்த அரியூர் ரெயில்வேகேட் அருகில் வசித்து வந்தவர் யோபுசரவணன் என்ற ஜோப்சரவணன் (வயது 49). இவர் தன்னை பாதிரியார் எனவும், தொண்டு அறக்கட்டளையின் தலைவராக உள்ளதாகவும் கூறி வந்துள்ளார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு தனக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் வருவதாகவும், அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாகவும், அதற்காக வீடு கட்டித்தர டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பி குடியாத்தத்தை சேர்ந்த பலர் டெபாசிட் தொகையாக லட்சக்கணக்கில் பணத்தை யோபுசரவணனிடம் கொடுத்துள்ளனர். ஆனால் யோபுசரவணன் வீடு கட்டி கொடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் டெபாசிட் தொகையை அவர்களிடம் திரும்ப அளிக்கவும் இல்லை.

இதனால் அவர்கள் தொடர்ந்து பணத்தை யோபுசரவணனிடம் கேட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் யோபுசரவணன் தனது வங்கி காசோலையை (செக்) கொடுத்துள்ளார். அவர்கள் காசோலையை வங்கி கணக்கில் போட்டபோது பணம் இல்லாமல் திரும்பியது.

இதனையடுத்து குடியாத்தம் அசோக்நகரை சேர்ந்த ராஜேந்திரன், நடுப்பேட்டை காந்திரோடை சேர்ந்த தயாளன் ஆகியோர் யோபுசரவணன் மீது ரூ.4 லட்சம் செக் மோசடி செய்து விட்டதாக ஒரு வழக்கையும், குடியாத்தம் பிச்சனூர் குப்பன்னசெட்டி தெருவை சேர்ந்த பாண்டியன், ஆணைகட்டி கணபதி தெருவை சேர்ந்த வாசு, ஆனந்தன் ஆகியோர் யோபுசரவணன் மீது ரூ.4 லட்சம் செக் மோசடி செய்து விட்டதாக ஒரு வழக்கையும் குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 2007-ம் ஆண்டு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இறுதிவிசாரணை கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு செல்லபாண்டியன் வழங்கிய தீர்ப்பில் ராஜேந்திரன், தயாளன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் யோபுசரவணனுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமாக காசோலையின் 2 மடங்கு தொகையான ரூ.8 லட்சத்தை புகார்தாரர்களுக்கு அளிக்க உத்தரவிட்டார்.

அதேபோல் பாண்டியன், வாசு, ஆனந்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் யோபுசரவணனுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமாக காசோலையின் 2 மடங்கு தொகையான ரூ.8 லட்சத்தை புகார்தாரர்களுக்கு அளிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்து தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்த பாதிரியார் யோபுசரவணன் நேற்று குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார். அப்போது அவர் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி செல்லபாண்டியன், பாதிரியார் யோபுசரவணனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து அவர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Next Story