வெளிநாட்டு வேலைக்கு செல்ல பணம் தேவைப்பட்டதால் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.4 லட்சம் பறிப்பு


வெளிநாட்டு வேலைக்கு செல்ல பணம் தேவைப்பட்டதால் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.4 லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2019 4:30 AM IST (Updated: 19 Dec 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு வேலைக்கு செல்ல பணம் தேவைப்பட்டதால் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சோழன் நகரைச் சேர்ந்தவர் கவுதம்(வயது 26). இவர், போரூர் காரம்பாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை செல்போனில் தொடர்புகொண்ட 2 பேர், “கொரட்டூர் பகுதியில் உள்ள நகை அடகு கடையில் 20 பவுன் நகைகளை ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்துக்கு அடகு வைத்து உள்ளோம். அந்த நகைகளை மீட்டு, மீண்டும் மார்க்கெட் விலைக்கு அவற்றை விற்றுத்தரும்படி” கூறினர். அதற்கான ரசீதையும் அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தனர்.

அதை நம்பிய கவுதம், ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்துடன் கொரட்டூர் ரெயில் நிலையம் அருகே சென்றார். ஆனால் மர்மநபர்கள் கூறிய நகை அடகு கடை பூட்டி இருந்தது. உடனே அவர்கள், அடகுகடையின் பின்புறம்தான் கடைக்காரரின் வீடு உள்ளது. பணத்தை கொடுத்தால் நாங்கள் போய் நகையை திருப்பி வருகிறோம் என்று கூறி கவுதமிடம் இருந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு இருவரும் தங்கள் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம், இதுபற்றி கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களின் செல்போன் அழைப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து சம்பவம் தொடர்பாக அம்பத்தூரைச் சேர்ந்த விஜயகுமார்(27), அமைந்தகரையை சேர்ந்த ஜெகன்(21), ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

கைதான இருவரும் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் வெளிநாடு செல்ல பணம் தேவைப்பட்டதால் என்ன செய்யலாம்? என்று யோசித்து வந்தனர்.

அப்போது, “அடகு வைத்த நகைகளை மீட்டு அதனை மீண்டும் மார்க்கெட் விலைக்கே விற்று தருவதாக” வந்த அந்த தனியார் நிதி நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்த விஜயகுமார், ஜெகன் இருவரும் நகையை அடகு வைத்ததுபோல் போலியான ரசீதை தயார் செய்து, அதை நிதி நிறுவன ஊழியர் கவுதமுக்கு அனுப்பினர். அதை நம்பி பணத்துடன் வந்த அவரை ஏமாற்றி பணத்தை பறித்துச்சென்றது தெரிந்தது.

கைதான 2 பேரிடம் இருந்தும் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story