சி.எஸ்.எம்.டி. நடைமேம்பால விபத்து: தணிக்கையாளர் உள்பட 4 பேருக்கு ஜாமீன்; ஐகோர்ட்டு உத்தரவு


சி.எஸ்.எம்.டி. நடைமேம்பால விபத்து:  தணிக்கையாளர் உள்பட 4 பேருக்கு ஜாமீன்; ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Dec 2019 4:55 AM IST (Updated: 19 Dec 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

சி.எஸ்.எம்.டி. நடைமேம்பால விபத்தில் கைது செய்யப்பட்ட தணிக்கையாளர் உள்பட 4 பேருக்கு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை, 

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகில் ஹிமாலயா நடைமேம்பாலம் இருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று இந்த நடைமேம்பாலம் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி இரவு இடிந்து விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடைமேம்பாலம் பயன்படுத்த தகுதியானது என தவறான சான்றிதழ் வழங்கிய தணிக்கையாளர் நீரஜ்குமார் தேசாய், அப்போதைய மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சந்திக் ககுல்தே, அனில் பாட்டீல், சீத்தலா பிரசாத் கோரி ஆகிய 4 பேரை கைது செய்திருந்தனர்.

இவர்கள் 4 பேரும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அவர்கள் ஜாமீன் கோரி செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் செசன்ஸ் கோர்ட்டு அவர்களது ஜாமீன் மனுவை நிகாகரித்ததை அடுத்து ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டை அணுகினர். நேற்று அவர்களது ஜாமீன் மனு மீதான இறுதி விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது.

அப்போது தணிக்கையாளர் நீரஜ்குமார் தேசாய் உள்ளிட்ட 4 பேருக்கு நீதிபதி எஸ்.கே.ஷிண்டே ரூ.50 ஆயிரம் பிணை தொகையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Next Story