நாக்பூர் மேயர் சந்தீப் ஜோஷியை சுட்டு கொல்ல முயற்சி; மயிரிழையில் உயிர் தப்பினார்
நாக்பூரில் நள்ளிரவு நேரத்தில் மேயர் சந்தீப் ஜோஷி மீது 2 மர்ம ஆசாமிகள் 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் மேயர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
மும்பை,
நாக்பூர் மாநகராட்சி பாரதீய ஜனதா வசம் உள்ளது. மேயராக பாரதீய ஜனதாவின் சந்தீப் ஜோஷி இருந்து வருகிறார். சந்தீப் ஜோஷிக்கு நேற்றுமுன்தினம் 24-வது திருமண நாள். இதை அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடினார். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் நள்ளிரவில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
அனைவரும் 10 முதல் 15 கார்களில் சென்று கொண்டிருந்தனர். உறவினர்கள், நண்பர்களின் கார்கள் முன்னே செல்ல மேயர் சந்தீப் ஜோஷியின் கார் பின்னால் வந்து கொண்டு இருந்தது. மேயர் அலுவல் பணிக்கு பயன்படுத்தும் காரை சந்தீப்ஜோஷியே ஓட்டிச் சென்றார்.
அப்போது மேயர் சந்தீப் ஜோஷியின் காரை பின் தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஹெல்மெட் அணிந்து இருந்தனர்.
சந்தீப் ஜோஷியின் கார் அவுட்டர் ரிங் ரோடு மற்றும் வார்தாரோடு சந்திப்பில் சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த நபர் திடீரென மேயரின் காரை நோக்கி 3 தடவை துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு குண்டு டிரைவர் இருக்கை பகுதி கண்ணாடியையும், மற்றொரு குண்டு டிரைவர் இருக்கையின் பின்புற பகுதி கண்ணாடி வழியாகவும் துளைத்து சென்றன. 3-வது குண்டு காரின் பின்புறம் பாய்ந்தது. இதனால் மேயர் சந்தீப் ஜோஷி மயிரிழையில் உயிர் தப்பினார்.
அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் எதிர்பாராத இந்த தாக்குதல் சம்பவத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளான சந்தீப் ஜோஷி உடனடியாக காரை நிறுத்தி விட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இதற்கிடையே துப்பாக்கியால் சுட்டதில் மேயரின் கதி முடிந்து இருக்கலாம் என்று கருதிய ஆசாமிகள் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டனர்.
பெல்டாரோடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள். கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். நாக்பூர் இணை போலீஸ் கமிஷனர் ரவீந்திர கதமும் நள்ளிரவில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அரசியல் விரோதம் காரணமாக மேயர் சந்தீப் ஜோஷியை கொல்ல முயற்சி நடந்ததா அல்லது வேறு காரணமா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தப்பியோடிய மர்மஆசாமிகள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் மேயர் மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நாக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் மேயர் சந்தீப் ஜோஷிக்கு மாநகராட்சி புகார் பெட்டியில் 2 மிரட்டல் கடிதங்கள் வந்து இருந்தன. நில ஆக்கிரமிப்பை அகற்றியதற்காக இந்த மிரட்டல் கடிதங்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த மாதம் வீட்டில் நின்ற அவர் அலுவல் பணிக்கு பயன்படுத்தும் கார் திருட்டு போனது. அடுத்த நாளே காரை மீட்ட போலீசார், திருட்டு தொடர்பாக ஒருவரை கைது செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story