அரசியல் சாசனத்தை சிதைக்கும் இந்திய குடியுரிமை சட்டம்; மத்திய அரசுக்கு குமாரசாமி கண்டனம்
இந்திய குடியுரிமை சட்டம் அரசியல் சாசனத்தை சிதைப்பதாக உள்ளது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய பா.ஜனதா அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (என்.ஆர்.சி.) கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. நமது நாடு பல்வேறு வரலாறுகளை கொண்டுள்ளது. இங்கு பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. அம்பேத்கர், அரசியல் சாசனத்தை உருவாக்கி கொடுத்துள்ளார்.
மத்தியில் பா.ஜனதா 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து இப்போது இந்திய குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டம், அரசியல் சாசனத்தின் அடித்தளத்தை சிதைப்பதாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகளை பெற மத்திய அரசு மதசார்பற்ற கொள்கையின் பாரம்பரியத்தை அழிக்கிறது. இது தவறானது.
சுதந்திர போராட்டத்தின்போது நமது முன்னோர் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்காகவும் போராடினர். ஆனால் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் சுயநலத்திற்காக ஒவ்வொன்றையும் அழித்து வருகின்றன. வாக்குகளை பெற குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விஷயத்தில் அந்த இரு கட்சிகளும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த சமுதாயத்தை பாதுகாக்க தாங்கள் போராடுவது போல் இரு கட்சிகளும் காட்டிக் கொள்கின்றன. ஆனால் தங்களின் வாக்கு சதவீதத்தை அதிகரித்துக்கொள்ள முயற்சி செய்கின்றன. மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த பல்வேறு சவால்கள் உள்ளன. மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தன்மை இருக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மோசமான நிலையில் உள்ளது. இவற்றை சரிசெய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டில் குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இந்த குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த சட்டம், முஸ்லிம்களிடையே பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நாட்டில் மக்களிடையே அமைதியற்ற, அவநம்பிக்கையான சூழல் நிலவுகிறது. அடைக்கலம் தேடி ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு மக்கள் அகதிகளாக செல்லும் பிரச்சினை உலகம் முழுவதும் உள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு வழங்குவது மத்திய-மாநில அரசுகளின் கடமை. அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ள இந்த இந்திய குடியுரிமை சட்டத்தை ஜனதா தளம்(எஸ்) கட்சி எதிர்க்கிறது, கண்டிக்கிறது.
இந்த குடியுரிமை சட்டத்தை கர்நாடகத்தில் வருகிற ஜனவரி மாதம் அமல்படுத்துவதாக முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார். அசாம் மாநிலத்தில் இந்த சட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டது. ஆவணங்கள் இல்லாதவர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். நமது ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரும் ஆவணங்கள் இல்லாததால் முகாமில் வைக்கப்பட்டுள்ளார். அசாம், திரிபுரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருக்கும் பிரச்சினைகள் வேறு. இந்த சட்டம் தேவை தானா?. அரசியல் சாசனத்தின் மதசார்பற்ற கொள்கையை சிதைக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது.
தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். புனிதமான பா.ஜனதா அரசு, இடைத்தேர்தலில் மக்கள் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளேன். ஆபரேஷன் தாமரை மூலம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுப்பதை பா.ஜனதா தனது கொள்கையாக கொண்டுள்ளது. அது அவர்களின் தொழில். எங்கள் வீட்டில் நடந்த பூஜையில் ஜி.டி.தேவேகவுடாவை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். எங்கள் கட்சியை சேர்ந்த யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். ஊடகங்கள் தான் இவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன.
மக்கள் பெரும்பான்மை பலத்தை கொடுத்துவிட்டனர், எடியூரப்பா தலைமையிலான புனிதமான அரசு, நல்லாட்சி நிர்வாகத்தை நடத்தட்டும். இந்த அரசுக்கு நாங்கள் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க மாட்டோம். வரும் நாட்களில் எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியை செய்வேன். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், நான் முதல்-மந்திரி பதவியில் அமர மாட்டேன். கட்சி நிர்வாகிகளில் ஒருவருக்கு முதல்-மந்திரி பதவியை வழங்குவோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story