குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு எதிரொலி; கர்நாடகம் முழுவதும் 144 தடை உத்தரவு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதை தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.
பெங்களூரு,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. டெல்லி உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெங்களூரு நகரில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், இதையொட்டி 3 நாட்களுக்கு 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பித்தும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று இரவு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த மசோதாவுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கல்லூரி மாணவர்கள், சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம், அதில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து அடையாளம் காணப்பட்டு விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு அனுப்பி வைக்கப்படும்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்திற்கு அனுமதி கேட்டு ஏராளமான அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெங்களூரு போலீசுக்கு மனுக்கள் கொடுத்துள்ளனர். எந்த ஒரு அமைப்புக்கும் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. அவ்வாறு போராட்டம் நடத்த விரும்புபவர்கள் வடமாநிலங்களுக்கு சென்று போராடலாம். சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு பெங்களூருவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாளை(இன்று) மற்றும் 20-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு கூட சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
பெங்களூருவில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், அது உலகஅளவில் பேசப்படுகிறது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக பெங்களூருவில் அடுத்த 3 நாட்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூருவில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை(அதாவது இன்று) காலை 6 மணியில் இருந்து வருகிற 21-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பெங்களூரு நகரில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த அனுமதி கிடையாது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பெங்களூருவில் அமைதியை நிலை நாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் வதந்தி பரப்புவோரை போலீசாரின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.”
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு நகர் மட்டுமின்றி உடுப்பி, ஹாசன், தாவணகெரே, துமகூரு, ராமநகர், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர், பாகல்கோட்டை மாவட்டங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.
மற்றபடி பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். வாகன போக்குவரத்துக்கு வழக்கம்போல் இருக்கும் போராட்டங்கள் நடத்துவதற்கு மட்டும் அனுமதி கிடையாது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story