குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தி இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம்?
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தி இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக சந்தேகம் எழுந்து உள்ளது. இதனால் தலைமறைவு குற்றவாளிகள் 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் இந்து அமைப்பு களின் தலைவர்களை தீர்த்துகட்ட சதித்திட்டம் தீட்டி உள்ளதாகவும், எனவே அவர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் மத்திய உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்து அமைப்புகளின் தலைவர்களின் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களையொட்டி மத்திய உளவுத்துறை போலீசார் இந்த எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளனர் என்று உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.இதையடுத்து தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளிகள் குறித்த பட்டியலை போலீசார் தயாரித்தனர்.
அதில் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 25), நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சையது அலி நவாஸ் (25) மற்றும் அப்துல் சமாத், காஜா மொய்தீன் ஆகிய 4 பேர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேர் மீதும் இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக வழக்குகள் உள்ளன.
இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. ஆனால் அவர்கள் கடந்த 2 மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றும், போலீஸ் நிலையங்களில் ஆஜராகி கையெழுத்து போடவில்லை என்பதும் தெரியவந்தது. எனவே அவர்களை போலீசார் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அவர்கள் இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இது குறித்து தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேலம் அருகே ஒரு வாகனத்தில் 4 பேர் சந்தேகத்துக்கு இடமாக சென்றதாக உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்ட னர். அனைத்து மாவட்ட எல்லைகளிலும் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அப்துல் சமீம் உள்பட 4 பேரின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த 4 பேரின் புகைப்படங்களை பெற்ற கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகள், போலீஸ் நிலையங்களில் ஒட்டி வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரெயில் மூலமாக அவர்கள் தப்பி சென்றுவிடக்கூடாது என்பதற்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு யாரேனும் அடைக்கலம் கொடுத்து உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) அர்ஜூன் சம்பத், சக்தி சேனா நிறுவனர் அன்புமாரி உள்பட கோவையில் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கூறியதாவது:-
அப்துல் சமீம் உள்பட 4 பேரும் தலைமறைவாக இருப்பதால், அவர்களால் இந்து இயக்க தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. தற்போது நடந்து வரும் போராட்டத்தை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்களை நடத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்களை பிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவை மாநகர பகுதியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக வெளியூர்களில் இருந்து கோவை வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. கோவையில் உள்ள அனைத்து லாட்ஜ்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கிய நபர்கள் குறித்த பட்டியலும் தயாரிக்கப்பட்டது.
அதுபோன்று லாட்ஜ்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. மேலும் சந்தேகத்துக்கு இடமாக யாராவது புதிதாக வந்து வீடுகள் எடுத்து தங்கி உள்ளனரா என்பது குறித்தும் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தலைமறைவாக உள்ள 4 பேர் மீதும் தமிழகம் முழுவதும் வழக்குகள் இருப்பதாக தெரியவருகிறது. ஆனால் கோவையில் அவர்கள் மீது வழக்குகள் இல்லை. அவர்களை பிடிப்பதே போலீசாரின் முக்கிய நோக்கம் ஆகும். எனவே அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story