ஆம்பூர், வாணியம்பாடியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் போராட்டம்


ஆம்பூர், வாணியம்பாடியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2019 3:30 AM IST (Updated: 19 Dec 2019 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர், வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஆம்பூர்,

ஆம்பூர் அரசு நிதியுதவி பெறும் தனியார் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், டெல்லியில் உள்ள ஜாமியா கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கல்லூரி வளாகத்திற்குள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி அறிந்ததும் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தன், தாசில்தார் செண்பகவள்ளி ஆகியோர் கல்லூரிக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற முற்பட்டதால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி நியூடவுனில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை 10 மணிக்கு கல்லூரி நுழைவுவாயில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் கோ‌‌ஷமிட்டனர்.

ஒரு கட்டத்தில் போலீசாரின் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற மாணவர்களை, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிரு‌‌ஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், இருதயராஜ், மங்கையர்கரசி, ஜனார்த்தனன், லதா, தாசில்தார் சிவப்பிரகாசம், கிராம நிர்வாக அலுவலர் சற்குணம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி மாணவர்களை கல்லூரி வளாகத்திற்குள் திருப்பி அனுப்பினர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பின்னர் மாணவர்கள் கல்லூரி உள் பக்கத்தில் நின்று கொண்டு தொடர்ந்து கோ‌‌ஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story