சமையலுக்கு தரமற்ற காய்கறிகள் வாங்கிய, காகிதப்பட்டறை அரசுப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்


சமையலுக்கு தரமற்ற காய்கறிகள் வாங்கிய, காகிதப்பட்டறை அரசுப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 20 Dec 2019 4:00 AM IST (Updated: 19 Dec 2019 11:53 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் காகிதப்பட்டறை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்க தரமற்ற காய்கறிகள் வாங்கிய சத்துணவு அமைப்பாளரை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

வேலூர்,

வேலூர் காகிதப்பட்டறை உழவர்சந்தை வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இங்கு அப்பகுதியை சேர்ந்த 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு அவ்வப்போது பெயர்ந்து கீழே விழுந்தன.

அதைத்தொடர்ந்து அங்கு பயின்ற குழந்தைகள் காகிதப்பட்டறை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர். உழவர்சந்தை வளாகத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று கலெக்டருக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று காலை உழவர்சந்தை வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் புதிய கட்டிடம் கட்டும் வரை பள்ளி கட்டிடத்தில் குழந்தைகள் படிக்கட்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். பின்னர் கலெக்டர் உழவர்சந்தையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து கலெக்டர் காகிதப்பட்டறை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் குழந்தைகளின் வருகை பதிவேடு மற்றும் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறைகளை பார்வையிட்டார். பின்னர் பள்ளி சத்துணவு மையத்தில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க செய்யப்பட்டிருந்த லெமன் சாதத்தை சுவைத்தும், முட்டைகள் கெட்டு போகாமல் உள்ளதா? என்றும் தண்ணீரில் போட்டும் சோதித்து பார்த்தார்.

பின்னர் அவர் சத்துணவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை பார்வையிட்டார். அதில், தரமற்ற கத்தரிக்காய் உள்பட பல்வேறு காய்கறிகள் காணப்பட்டன. அதையடுத்து சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்த அம்முவிடம், உங்கள் வீட்டிற்கு சமையல் செய்வதற்கு இப்படிப்பட்ட காய்கறிகளை தான் வாங்குவீர்களா?, நல்ல காய்கறிகளை பார்த்து வாங்க வேண்டாமா? என்று கண்டித்தார். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியையை அழைத்து சத்துணவிற்கு வாங்கும் காய்கறிகள் மற்றும் மதிய உணவை ஆய்வு செய்ய மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து சத்துணவு அமைப்பாளர் அம்மு மற்றும் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் சத்துணவு அமைப்பாளர் அம்மு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியைக்கு இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செந்தில்குமார், வேலூர் தாசில்தார் சரவணமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story