கடலூர் அருகே கடலில் மீன்பிடித்த போது, மீனவர்களின் வலையில் சிக்கிய பிரமோஸ் ஏவுகணை பாகம்
கடலூர் அருகே கடலில் மீன்பிடித்த போது மீனவர்களின் வலையில் பிரமோஸ் ஏவுகணையின் பாகம் சிக்கியது. இது குறித்த விவரம் வருமாறு:-
கடலூர்,
கடலூர் தாழங்குடா சுனாமிநகரை சேர்ந்த சின்ன ஆனந்தன் மகன் அறிவரசன் (வயது 36), சிங்காரவேலர் தெருவை சேர்ந்த குமார் மகன் மணிமாறன்(32), ஜெயபால் மகன் அய்யப்பன்(26) ஆகிய 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பைபர் படகில் மீன்பிடிக்க நடுக்கடலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கடலூரில் இருந்து 11 நாட்டிக்கல் மைல் தொலைவில் வஞ்சரம் மீன் பிடிப்பதற்காக வலையை போட்டனர்.
அப்போது அந்த வலையை இழுத்த போது அதிக பாரமாக இருந்தது. இதனால் அவர்கள் பெரிய மீன் சிக்கி இருக்கலாம் என்ற ஆசையுடன் வலையை வெளியே எடுத்தனர். அப்போது வலையில் உருண்டை வடிவ இரும்பிலான பொருள் சிக்கியிருந்தது. அதில் ஒயர்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அதை கயிறு கட்டி கடற்கரைக்கு இழுத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த பொருளை கடற்கரையில் போட்டு விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை தாழங்குடா கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள், அந்த பொருளை பார்வையிட்டனர். அப்போது அந்த உருண்டை வடிவிலான இரும்பு பொருளில் பிரமோஸ் என்ற முத்திரை இருந்ததை பார்த்த அவர்கள், உடனே கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உருண்டை வடிவில் இருந்த அந்த இரும்பு பொருளை பார்வையிட்டனர்.
அதில் பிரமோஸ் பி.ஐ.எப்.பி.-04 என்று எழுதப்பட்டு இருந்தது. இதனால் அந்த பொருள் பிரமோஸ் ஏவுகணையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று போலீசார் முடிவு செய்தனர். பின்னர் இதுபற்றி வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று இரவு வந்து, அந்த பொருளை ஆய்வு செய்து சென்றனர். இந்நிலையில் இரவு நீண்ட நேரமாகி விட்டதால், அந்த பொருளை யாரேனும் எடுத்து செல்லாத வகையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியா- ரஷியா கூட்டு தயாரிப்பில் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணை 200 கிலோ வெடி பொருளுடன் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ஆற்றல் கொண்டது. அந்த ஏவுகணையில் உள்ள ஒரு பாகம் கடலில் விழுந்து இருக்கலாம். ஆனால் விஞ்ஞானிகள் வந்து சோதனை செய்த பிறகே, அது எந்த பிரமோஸ் ஏவுகணையின் பாகம் என்பது தெரியவரும். அந்த பாகத்தை ஆய்வுக்காக நாளை (இன்று) காலை விஞ்ஞானிகளிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றார்.
ஏற்கனவே பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏவுகணையின் ஒரு பகுதி மீனவர்களின் வலையில் சிக்கிய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story