தூத்துக்குடி அருகே பலாத்கார வழக்கில் திருப்பம்: 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை கொன்று புதைப்பு - தாய்-அக்காள் கைது


தூத்துக்குடி அருகே பலாத்கார வழக்கில் திருப்பம்: 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை கொன்று புதைப்பு - தாய்-அக்காள் கைது
x
தினத்தந்தி 20 Dec 2019 4:30 AM IST (Updated: 20 Dec 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பலாத்கார வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமிக்கு பிறந்த குழந்தையை கொன்று புதைத்தது தொடர்பாக சிறுமியின் தாய், அக்காள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்தது. இந்த குழந்தையை சிறுமியின் குடும்பத்தினர், சிறுமியின் அக்காள் வீட்டின் பின்புறம் புதைத்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடமும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுமியை, தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் கீழத்தெருவை சேர்ந்த டி.வி.மெக்கானிக் ராஜூ (வயது 48) என்பவர் பலாத்காரம் செய்ததும், இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 15-ந்தேதி அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர்.

மேலும் போலீசார், குழந்தை இறந்தது தொடர்பாக சந்தேக மரணம் என்று மற்றொரு வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் திடீர் திருப்பமாக குழந்தை அடித்து கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பின்னர் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய், அக்காள் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் 2 பேரும் சேர்ந்து குழந்தையை மண்வெட்டி கணையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தையை தாய், அக்காள் அடித்துக் கொலை செய்து புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story