ரெயில் நிலையங்களில் பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு ஜி.எஸ்.டி. இல்லாமல் பில் வழங்கிய கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


ரெயில் நிலையங்களில் பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு ஜி.எஸ்.டி. இல்லாமல் பில் வழங்கிய கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 20 Dec 2019 4:30 AM IST (Updated: 20 Dec 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ரெயில் நிலையங்களில் பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜி.எஸ்.டி. இல்லாமல் பில் வழங்கிய கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருச்சி,

ரெயில்வே வாரியத்தின் பயணிகள் சேவை குழுத் தலைவர் ரமேஷ்சந்திர ராட்டன், உறுப்பினர்கள் சுந்தர், வெங்கடரமணி, சதானந்த் தனவேதி ஆகிய 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடைகளுக்கும் சென்று அங்கு குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் இருந்தது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

2-வது நடைமேடையில் உள்ள குழாயில் தண்ணீர் கசிந்து வெளியேறி கொண்டு இருந்தது. அதை உடனடியாக சரி செய்யும்படி கூறினர். ரெயில் நிலையத்தில் உள்ள ஸ்டால்களில் உணவு பண்டங்கள் முறையாக விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்த குழுவினர், பயணிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தனர்.

ரூ.5 ஆயிரம் அபராதம்

தொடர்ந்து பயணிகள் தகவல் மையத்தில் ஆட்கள் இல்லாமல் இருந்ததையும், அங்கு நாற்காலி உடைந்து இருந்ததையும் கண்டு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து 2-வது நடைமேடையில் உள்ள ஒரு கடையில் பயணிகள் பொருட்கள் வாங்கியதற்கு வழங்கப்படும் பில்லில் ஜி.எஸ்.டி. வரி இல்லாமல் இருந்தது. இதற்காக அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல, ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தை தூய்மையாக பராமரித்து இருந்ததற்காக ரெயில் நிலையத்துக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கினர்.

நகரும் படிக்கட்டுகள்

இதனைத்தொடர்ந்து குழுவின் தலைவர் ரமேஷ்சந்திர ராட்டன் நிருபர்களிடம் கூறுகையில், “இதுவரை 15 மாநிலங்களில் 175 ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்துள்ளேன். ரெயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறேன். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தலா ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் 6 நகரும் படிக்கட்டுகள், தலா ரூ.28 லட்சம் செலவில் 3 லிப்ட் வசதி போன்ற பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும்” என்றார்.

Next Story