நடைபயிற்சி சென்ற அ.ம.மு.க. பிரமுகர் படுகொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்
மதுரை அருகே நடைபயிற்சி சென்ற அ.ம.மு.க. பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 6 பேர் கும்பல் இந்த வெறிச்செயலை செய்தது.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளபட்டி பேரூராட்சியை சேர்ந்தவர் அசோகன்(வயது 50). முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர். மேலும் அ.ம.மு.க. பிரமுகரான இவர், சமீபத்தில் நடைபெற்ற அ.வல்லாளபட்டி கூட்டுறவு சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது, சட்ட-ஒழுங்கு பிரச்சினை எனக்கூறி தேர்தல் நிறுத்தப்பட்டு தற்போது வரை தனி அதிகாரி நிர்வாகத்தில் அந்த கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது.
அ.வல்லாளபட்டியில் அருந்து அழகர்கோவில் சாலையில் தினந்தோறும் நண்பர்களுடன் நடைபயிற்சி செல்வதை அசோகன் வழக்கமாக கொண்டிருந்தார். இதேபோல் நேற்று காலை 6 மணி அளவில் அவரது உறவினர் கார்த்திகைசாமியுடன்(52) நடைபயிற்சி சென்றார்.
அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, பின்னால் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் அசோகனை அடையாளம் காட்டினார்.
இதையடுத்து கார்த்திகைசாமியை ஆயுதங்களை காட்டி விரட்டிவிட்டு, அசோகனை அந்த கும்பல் சுற்றி வளைத்தது. பின்னர் ஓட, ஓட விரட்டி அசோகனை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த அவர் பரிதாபாக இறந்தார்.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியது. இந்த கொடூரக் கொலை குறித்த தகவல் அறிந்த மேலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையாளி ஒருவன் கத்தியால் வெட்டும்போது அதனை அசோகன் தடுக்க முயன்றபோது அந்த கத்தி அருகிலுள்ள ஓடை தண்ணீரில் விழுந்தது. அந்த கத்தியை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் அங்கு கிடந்த கொலையாளிகளின் செருப்புகள் மற்றும் சில தடயங்களை போலீசார் சேகரித்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கைப்பற்றிய கத்தியானது பெரும்பாலும் கூலிப்படையினர் மட்டுமே பயன்படுத்தும் ‘ரேம்போ’ எனும் வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவத்தில் கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இந்த கொலைக்கான காரணம் முன்பகையா? அரசியல் விரோதமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த கொலை பற்றி தகவல் கிடைத்ததும் அ.வல்லாளபட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் மேலூர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கொலையாளிகளை கைது செய்யும் வரை அசோகன் உடலை வாங்க மாட்டோம், மறியலை கைவிடமாட்டோம் என கோஷமிட்டனர்.
காலை 8.30 மணி அளவில் தொடங்கிய இந்த சாலைமறியல் 2 மணிநேரமாக நீடித்தது. குற்றவாளிகளை விரைவாக பிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட அசோகனுக்கு, முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story