கல்பாக்கம் அருகே, கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
கல்பாக்கம் அருகே கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கல்பாக்கம்,
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக். இவருக்கு சொந்தமான மீன்பிடி விசை படகு பழுது பார்ப்பதற்காக கடல் வழியாக புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதிக்கு கடலூர் பகுதி மீனவர்கள் ராஜி (43), வால்மணி (58) மற்றும் மலர்வண்ணன் (39) ஆகியோர் கொண்டு சென்றனர்.
நேற்று முன்தினம் சென்ற அவர்கள் பழுது பார்த்த பிறகு மீண்டும் சென்னை நோக்கி கடலில் வந்து கொண்டிருந்தனர். கல்பாக்கம் அருகே வரும்போது விசைப்படகில் உள்ள துவாரம் வழியாக கடல் நீர் படகுக்குள் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் 3 பேரும் படகில் தேங்கிய கடல்நீரை வாளி மூலம் வெளியேற்றினர்.
கடல் நீர் அதிகமாக படகில் தேங்கியதால் படகு மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. படகில் இருந்த 3 மீனவர்களும் தத்தளித்தனர். உடனடியாக படகின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பைபர் படகில் விரைந்து சென்று சதுரங்கப்பட்டினம் மீனவர்களின் உதவியுடன் கடலில் தத்தளித்த 3 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தார்.
பின்னர் அந்த விசைப்படகு கயிறு கட்டி கரைக்கு இழுத்து வரப்பட்டது.
Related Tags :
Next Story