வண்டலூர் பூங்கா அருகே, மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு


வண்டலூர் பூங்கா அருகே, மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2019 4:15 AM IST (Updated: 20 Dec 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் பூங்கா அருகே நடந்து வரும் மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகே அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்பதால் சுமார் 700 மீட்டர் தொலைவுக்கு ரூ.55 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பணி தொடங்கிய நாள் முதல் தற்போது வரை தினந்தோறும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். உயர் மட்ட மேம்பால பணிகள் தொடங்கிய நாளில் இருந்து மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இந்த உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் சார்பில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை திடீரென நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சாந்தி வண்டலூர் பூங்கா அருகே நடைபெறும் உயர்மட்ட மேம்பால பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் இன்னும் சில மாதங்களுக்குள் இந்த உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அப்போது அவருடன் நெடுஞ்சாலைத்துறை சென்னை வட்ட கண்காணிப்பு பொறியாளர் இளங்கோ, செங்கல்பட்டு கோட்ட பொறியாளர் சத்தியசீலன் உள்பட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story