உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்குமா? மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மதுரை,
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரத்தை சேர்ந்த வினோத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஊராட்சி பதவிகளுக்கான இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கும்படி ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க சிலர் விரும்பமாட்டார்கள். அவர்கள் நோட்டாவை தேர்ந்தெடுத்து வாக்களிக்கவே விரும்புவார்கள்.
எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல்களில் நோட்டாவை தேர்வு செய்து வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. இதன்மூலம் மக்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவை தேர்ந்தெடுத்து வாக்களிக்கும் உரிமையை வழங்கும்படி கடந்த 9-ந்தேதி மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.
எனது மனு அடிப்படையில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story