அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு, கொலை மிரட்டல் விடுத்த கூலிப்படை கும்பல் கைது
ராமநாதபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் பகை எதிரொலியாக அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பு சூடுபிடித்துள்ளது. தங்களின் செல்வாக்கு, குடும்ப பாரம்பரியம், வசதி, மக்களின் ஆதரவு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிருக்கும் என்பதால் செல்வாக்கை காட்டுவதற்காக பலத்தை காட்டும் முயற்சியில் அனைவரும் இறங்கி உள்ளனர். ஒருபுறம் செல்வாக்கை காட்டும் நடவடிக்கையில் ஒரு தரப்பு ஈடுபட்டு கொண்டிருக்க மற்றொரு தரப்பு தங்களின் ஆள்பலம், பண பலம் போன்றவற்றை காட்டி ஆதரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக உள்ளாட்சி தேர்தலில் ஆங்காங்கே மோதல் வெடிக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும் சக்கரக்கோட்டை 9-வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அசோக்குமார்(வயது47) என்பவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.
இதுகுறித்து அசோக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மகா சக்திநகர் முருகன் மகன் கண்ணன்(23), எம்.எஸ்.கே.நகர் நாகராஜ் மகன் கார்த்தி(23), ராமு மகன் அருண்குமார்(24), வீரபத்ர சாமிதெரு பாலசுப்பிரமணியன் மகன் தயாநிதி(21), ஓம் சக்திநகர் சேகர் மகன் உலகநாதன்(23) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
தப்பி ஓடிய நேருநகர் தங்கராஜ் மகன் முருகன்முரளிபாபு என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். தேர்தல் போட்டி காரணமாக மேற்கண்ட அசோக்குமாரை கொலை செய்யும் நோக்கத்துடன் மேற்கண்ட கூலிப்படை கும்பல் வந்திருப்பதாகவும், இதற்கு அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரே தேர்தல் பகை காரணமாக இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரை கொலை செய்யும் நோக்கத்துடன் கூலிப்படை மர்ம கும்பல் பிடிபட்டுள்ள சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story