ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அ.ம.மு.க. பெண் வேட்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அ.ம.மு.க. பெண் வேட்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2019 4:30 AM IST (Updated: 20 Dec 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அ.ம.மு.க. பெண் வேட்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆத்தூர்,

சேலம் மாவட்ட ஊராட்சியின் 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.ம.மு.க. சார்பில் பிரேமலதா கமலக்கண்ணன், 26-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுதாமணிகண்டன் ஆகிய 2 பேரும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது.

அப்போது அ.ம.மு.க. பெண் வேட்பாளர்கள் பிரேமலதா கமலக்கண்ணன், சுதாமணிகண்டன் ஆகியோர் தங்களுக்கு பஸ் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலரும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளருமான சுந்தரராஜன் மற்றும் அலுவலர்களிடம் தெரிவித்தனர். அப்போது உங்களுக்கு பஸ் சின்னம் ஒதுக்க படமாட்டாது. அதற்கு பதிலாக கைக்ெகடிகாரம் அல்லது வேறு சின்னம் தான் ஒதுக்க முடியும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரண்டனர்

இதுபற்றி தகவல் அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.மாதேஸ்வரன், நரசிங்கபுரம் நகரசபை முன்னாள் தலைவர் காட்டு ராஜா ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க.வினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அ.ம.மு.க. வேட்பாளர்கள் 2 பேருக்கும் பஸ் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story