தேவர்சோலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் பேரணி


தேவர்சோலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் பேரணி
x
தினத்தந்தி 20 Dec 2019 10:45 PM GMT (Updated: 20 Dec 2019 5:08 PM GMT)

தேவர்சோலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் பேரணி சென்றனர்.

கூடலூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், மாணவ அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வன்முறை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் திட்டமிட்டபடி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங், இன்ஸ்பெக்டர்கள் அக்பர்கான், சிவக்குமார் உள்பட ஏராளமான போலீசார் நேற்று தேவர்சோலையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது மாலை 3 மணிக்கு தேவர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு ஏராளமானவர்கள் திரண்டு பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலன் ஏற்படவில்லை. மேலும் போலீசாருக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே லேசாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் தடையை மீறி ஏராளமானவர்கள் முக்கிய சாலை வழியாக பேரணி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். பின்னர் தேவர்சோலை பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவர்சோலை பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் தனியார் வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பல மணி நேரம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கடைவீதி பள்ளிவாசல் செயலாளர் பாவா சிக்கந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

முடிவில் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி யாகூப் நன்றி கூறினார்.

Next Story