திருமணமான 4 மாதத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர்


திருமணமான 4 மாதத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர்
x
தினத்தந்தி 21 Dec 2019 5:00 AM IST (Updated: 20 Dec 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

திருமணமான 4 மாதத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம், பசும்பொன் நகர், கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 31). கார் டிரைவர். இவருடைய மனைவி அஞ்சலி (21). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

அய்யனாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தை கைவிடும்படி அஞ்சலி, தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது .

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யனார், அதே பகுதியில் வசிக்கும் அஞ்சலியின் அக்காவுக்கு போன்செய்து, “அஞ்சலிக்கு உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்ல வேண்டும். வீட்டுக்குள் வாருங்கள்” என அழைத்தார்.

உடனடியாக அஞ்சலியின் அக்கா மற்றும் மாமா இருவரும் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு அஞ்சலி தரையில் மயங்கி கிடந்தார். அங்கு அய்யனாரை காணவில்லை. உடனே அஞ்சலியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அஞ்சலி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஞ்சலியின் அக்கா மற்றும் மாமா, அய்யனார்தான் அவரை கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என கருதி பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவான அய்யனாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் பெரும்பாக்கம் ஏரி பகுதியில் அவர் மறைந்து இருப்பது தெரிந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், அய்யனாரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

போலீசாரிடம் அய்யனார் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனக்கு குடிபழக்கம் உள்ளதால் அதை கைவிடும்படி அஞ்சலி என்னிடம் தகராறு செய்து வந்தார். இதனால் திருமணம் ஆனதில் இருந்து அடிக்கடி எங்களுக்குள் சண்டை நடக்கும்.

வேலூரில் உள்ள அஞ்சலியின் உறவினர் இறந்துவிட்டார். அதற்கு செல்லவேண்டும் என்று அஞ்சலி கூறினார். ஆனால் திருமணமாகி ஒரு வருடம் வரை கெட்டகாரியங்களுக்கு செல்லக்கூடாது என்று கூறி நான், சாவு வீட்டுக்கு செல்ல மறுத்தேன்.

இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த நான், ஆத்திரத்தில் அஞ்சலியின் கன்னத்தில் அறைந்தேன். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கீழே தள்ளினேன். அஞ்சலி மயங்கி விழுந்தவுடன் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டேன்.

அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது, அஞ்சலி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அஞ்சலியின் அக்காவுக்கு போன் செய்து, அஞ்சலிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்லுங்கள் என்று கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டேன். ஆனால் என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story